
சிங்கப்பூர் – ஆகஸ்ட்-4 – பயணிகளை ஏற்றிச் செல்லும் e-hailing சேவைகள் மூலம் சிங்கப்பூர்-மலேசிய எல்லை தாண்டிய போக்குவரத்தை முழுமையாக தாராளமயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என, சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து நிறுவனம் LTA தெளிவுப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் மற்றும் மலேசிய அதிகாரிகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி எல்லை தாண்டிய சேவை ஏற்பாடுகளைப் பற்றி விவாதிக்க சந்திப்பு நடத்தியது உண்மைதான்; ஆனால் பயணிகளை ஏற்றிச் செல்ல எல்லை தாண்டிய e-hailing சேவையை அனுமதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அது கூறிற்று.
சிங்கப்பூர், எல்லை தாண்டிய On-Demand சவாரி சேவைகளை அறிமுகப்படுத்த விரும்புவதாக மலேசிய ஊடகங்கள் அண்மையில் வெளியிட்ட செய்திகளை மறுக்கும் வகையில் இவ்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எல்லை கடந்த பயணங்களை தரமுயர்த்தும் பரிந்துரைகள் வரவேற்கக்கூடியவையே. என்றாலும் இப்போதைக்கு எந்த முடிவும் இல்லை என, தனது ஃபேஸ்புக் பதிவில் LTA தெரிவித்தது.
நடப்பில், சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் பாரு இடையே பயணிகளை ஏற்றிச் செல்ல இருபுறமும் உரிமம் பெற்ற 200 டாக்சிகளை அனுமதிக்கும் ஒரு பரஸ்பர எல்லை தாண்டிய டேக்சி திட்டம் அமுலில் இருப்பதையும் அது சுட்டிக் காட்டியது.
இந்த எல்லை தாண்டிய சிங்கப்பூர் டேக்சிகளுக்கு, ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் சென்ட்ரலிலும், மலேசிய டேக்சிகளுக்கு சிங்கப்பூரில் உள்ள பான் சான் ஸ்ட்ரீட் டெர்மினல் (Ban San Street Terminal) ஆகிய குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்க அனுமதியுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.