
பெய்ஜிங், அக்டோபர் – 8,
கடும் பனிச்சரிவால் எவரெஸ்ட் மலை அருகேயுள்ள ‘Tibetan Plateau’ பகுதியில் சிக்கியிருந்த சுமார் 1,000 பயணிகள் மற்றும் உதவி பணியாளர்கள் அனைவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக சீன அரசுத் தகவல் தெரிவித்துள்ளது.
சீனாவின் மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இப்பகுதி, சமீப ஆண்டுகளில் மிக பிரபலமான மலை ஏறும் மற்றும் சுற்றுலா தளமாக மாறியுள்ளதைத் தொடர்ந்து கடந்த எட்டு நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பயணிகள் அந்தப் பகுதிக்கு வந்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த வார இறுதியில் ஏற்பட்ட கடும் பனிப்புயல், முகாம்களை பனிக்குள் புதைத்து, போக்குவரத்தையும் மீட்பு பணிகளையும் கடுமையாக பாதித்துள்ளது.
இதனால் தீயணைப்பு வீரர்கள், குதிரைகள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான மீட்பு நடவடிக்கை அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் மொத்தம் 580 பயணிகளும் 300க்கும் மேற்பட்ட வழிகாட்டிகளும் அருகிலுள்ள நகரத்திற்குச் சுகமாகச் சென்றடைந்துள்ளனர் என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
மீட்பு நடவடிக்கைகள் நிறைவு பெற்றிருந்தாலும், கடுமையான வானிலை, அப்பகுதியின் பிற மலைப்பகுதிகளிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.