
இந்தியா, ஜூலை.02- ஒடிசா மாநிலத்தில் 5-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த இந்திப் படத்தின் பாடல் இடம் பெற்றதால் சர்ச்சை வெடித்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து 1999-ல் வெளியான படம் `ஹம் தில் தே சுகே சனம்’’. அப்படத்தில் இருந்த ‘நிம்புடா நிம்புடா’ என்ற பாடல் பள்ளி மாணவர்கள் பயிலும் பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானி நாட்டுபுறக் கலையை அடிப்படையாகக் கொண்ட அப்பாடல் எவ்வித மாற்றமும் இல்லாமல் பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டது எப்படி என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்தவறு எவ்வாறு நிகழ்ந்தது என்பது புரியாதப் புதிராக உள்ள நிலையில், ஏற்கனவே அச்சிடப்பட்ட தாள்கள், பாடப் புத்தகங்களைத் தொகுக்கும் போது அப்பாடல் தவறுதலாக அச்சிடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்ட புத்தகங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இக்குளறுபடிகள் குறித்து விசாரிக்க ஒடிசா முதல்வர் உயர்மட்டக் குழுவொன்றை அமைத்துள்ளார். அலட்சியமாக இருந்த தரப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.



