ஒற்றுமை அரசாங்கத்தை விட்டு விலகி பாஸ் கட்சியுடன் அம்னோ கூட்டணியா? அக்மால் வரலாற்றை தாமதப்படுத்த முயற்கிறாரா என ராமசாமி கேள்வி

கோலாலம்பூர், ஜனவரி-4,
அம்னோ இளைஞர் பிரிவு வரலாற்றின் பயணத்தைத் தாமதப்படுத்த முயலுகிறதா என, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி. இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்னோ, மடானி அரசாங்கத்தை விட்டு விலகி பாஸ் கட்சியுடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டுமென, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ Dr முஹமட் அக்மால் சாலே வலியுறுத்தியுள்ளதை, ராமசாமி அவ்வாறு விமர்சித்தார்.
தம்மைப் பொருத்தவரை, இது வெறும் இளைஞர் பிரிவின் தனிப்பட்ட நிலைப்பாடு அல்ல, சில அம்னோ தலைவர்களும் அடிமட்ட ஆதரவாளர்களும் இதற்கு துணை நிற்கலாம் என ராமசாமி குறிப்பிட்டார்.
குறிப்பாக கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் ஆசி இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்றார் அவர்.
மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாத்தின் ஒற்றுமையை அக்மால் காரணம் காட்டினாலும், டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வீட்டுக் காவல் மறுக்கப்பட்டதை DAP கொண்டாடியதுதான் அம்னோவின் அதிருப்திக்கு உண்மையானக் காரணம் என ராமசாமி சுட்டிக் காட்டினார்.
பாஸ் கட்சியுடன் மீண்டும் இணைந்தாலும், அம்னோவுக்கு வலுவில்லை; அதனால் பழைய ஆதிக்கத்தைச் செலுத்த முடியாது.
பாஸ் தான் இப்போது முன்னிலை வகிக்கிறது; பெரிக்காத்தான் நேஷனல் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றத் துடிக்கும் பாஸ் கட்சி புத்ராஜெயாவிலும் தலைமைப் பொறுப்பை ஏற்க கனவு காண்கிறது.
ஆக, அம்னோவும் பாஸும் மீண்டும் கை கோர்த்தாலும் அதிகார போராட்டம் வெடிக்கும்.
ஆனால், அம்னோவின் வீழ்ச்சி, இந்தியா, வங்காளதேசம், தைவான் போன்ற நாடுகளில் சுதந்திரத்திற்குப் பிறகு வீழ்ந்த கட்சிகளின் நிலையைப் போன்றது என இராமசாமி உவமைப்படுத்தினார்.
கைவிட்டு போனதை பெறத் துடிக்கும் அம்னோ இளைஞர் பிரிவின் செயல், வரலாற்றை தாமதப்படுத்த முயல்வதற்கு ஒப்பாகும்;
அது இறுதியில் அணையப்போகும் மெழுகுவர்த்தி போல என ராமசாமி குறிப்பிட்டார்…



