கோலாலம்பூர், நவம்பர்-21, தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வரும் காலங்களில் சிறந்த அடைவுநிலையைப் பதிவுச் செய்யுமென, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திடமாக நம்புகிறார்.
தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் போராடும் அமைப்பான பெர்சே (BERSIH), ஈராண்டு கால மத்திய அரசின் அடைவுநிலைக்கு D மதிப்பெண்ணை வழங்கியது குறித்து பிரதமர் கருத்துரைத்தார்.
“பெர்சே, D மதிப்பெண்ணைத் தான் வழங்கியுள்ளது. தோல்வி தேர்ச்சி நிலையான F-பை அல்ல. UPSR தேர்வில் D வாங்கியவர்கள் எல்லாம் SPM தேர்வில் A வாங்கியதில்லையா?” என அவர் குறிப்பிட்டார்.
உண்மையில் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அடைவுநிலையை மதிப்பீடு செய்த இன்னும் நேரம் வந்து விடவில்லை என பிரதமர் சொன்னார்.
நாட்டை நிர்வகித்த இந்த ஈராண்டுகளில் அன்வாரின் அரசாங்கத்திற்கு D மதிப்பெண்ணை கொண்டு வரும் 45.8 புள்ளிகளையே வழங்குவதாக பெர்சே நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீர்திருத்த வாக்குறுதிகள் பலவும் நிறைவேற்றப்படாமலிருப்பதால், அந்த மதிப்பெண்ணை வழங்குவதாக பெர்சே கூறியிருந்தது.
நாட்டின் பத்தாவது பிரதமராக அன்வார் பொறுப்பேற்று வரும் ஞாயிறு, நவம்பர் 24-ஆம் தேதியோடு ஈராண்டுகள் நிறைவடைகிறது