கடத்தல் கும்பல் முறியடிப்பு ஆயுதப் படையின் 5 மூத்த அதிகாரிகள் கைது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14- நாட்டின் தென் பகுதியில் செயல்பட்ட கடத்தல் கும்பலுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதப்படைகளைச் சேர்ந்த ஐந்து மூத்த அதிகாரிகளை MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தடுத்து வைத்துள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் நேற்று நடந்த சோதனைகளில் MACC-யால் கைது செய்யப்பட்ட 10 பேரில் ஐந்து உயர் அதிகாரிகளும் அடங்குவர்.
இரண்டு ஆன்லைன் ஊடக பத்திரிகையாளர்கள், ஒரு நிறுவன நிர்வாகி , மலேசிய மருத்துவ சங்கத்தின் நிர்வாக உதவியாளர் மற்றும் ஒரு வெளிநாட்டுப் பெண் உப்பட மற்ற ஐந்து பேரும் இன்று தடுத்துவைக்கப்பட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.
ஆயுதப்படைகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அந்த மூத்த அதிகாரிகள், அமலாக்க நடவடிக்கையைத் தவிர்க்க உதவுவதற்காக கடத்தல் கும்பலுடன் இணைந்து செயல் நடவடிக்கை தகவல்களைக் கசியவிட்டதாக நம்பப்படுகிறது என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. கடத்தப்பட்ட பொருட்களில் அண்டை நாடுகளிலிருந்து போதைப்பொருள், சிகரெட்டுகள் மற்றும் பிற கடத்தல் பொருட்கள் உள்ளடங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதன் மாதாந்திர மதிப்பு 5 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.