
கோலாலம்பூர், மார்ச்-22 – சாலையோரம் மோட்டார் சைக்கிளில் வியாபாரம் செய்து வந்த ஒரு முதியவருக்கும், நகராண்மைக் கழக அமுலாக்க அதிகாரிகளுக்கும் நடந்த சூடான வாக்குவாதத்தால், பெத்தாய்கள் சாலையில் பறந்த சம்பவம் வைரலாகியுள்ளது.
வாகன நிறுத்துமிடத்தில் வியாபாரம் செய்ய வேண்டாமென அமுலாக்க அதிகாரிகள் கூறியதால் விரக்தியடைந்த முதியவர், விற்பனைக்காக வைத்திருந்த பெத்தாய்களை சாலையில் தூக்கி எறிந்தார்.
“என் சொந்த நாட்டில் உழைத்து சம்பாரிக்கக் கூட எனக்கு உரிமையில்லையா? நான் என்ன இங்கு 24 மணி நேரமுமா வியாபாரம் செய்கிறேன்?” எனக் காட்டமாகக் கேட்டுக் கொண்டே பெத்தாய்களை அவர் வீசினார்.
சில நிமிடங்ளுக்கு நீடித்த அச்சர்சையால் வழிப்போக்கர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
நேற்று மதியம் facebook-கில் பதிவேற்றப்பட்ட வீடியோ 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 16,000 கருத்துகளையும் பெற்றுள்ளது.
வாழ்க்கையை நடத்த போராடும் அந்த முதியவருக்கு வலைத்தளங்களில் அனுதாபங்கள் குவிந்து வருகின்றன.
இந்த வயதிலும் தன்னால் இயன்ற அளவு உழைத்து சம்பாரிப்பவரிடம் அதிகாரிகள் இப்படித் தான் கருணையில்லாமல் நடந்துகொள்வதா என பலர் கொந்தளித்தனர்.
சம்பவ இடம் சரியாகத் தெரியவில்லை; என்றாலும் வலைத்தளவாசிகள் அது நெகிரி செம்பிலான், போர்டிக்சனில் நிகழ்ந்ததாகக் கூறுகின்றனர்.