
ஜோகூர் பாரு, மார்ச்-20 – போலிக் கணக்கைக் காட்டி நிறுவன நிதியிலிருந்து சுமார் 8.4 மில்லியன் ரிங்கிட் பணத்தை மீட்ட சந்தேகத்தின் பேரில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, ஒரு தம்பதியையும், ஒரு நிறுவன இயக்குநரையும் தடுப்புக் காவலில் வைத்துள்ளது.
2 ஆண் சந்தேக நபர்கள் சனிக்கிழமை வரை தடுத்து வைக்கப்பட்ட வேளை, குடும்ப மாது MACC ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
30 முதல் 60 வயதிலான அம்மூவரும் செவ்வாய்க்கிழமை ஜோகூர் MACC அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க சென்ற போது கைதாகினர்.
2018 ஏப்ரலுக்கும் அக்டோபருக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் அக்குற்றத்தைப் புரிந்திருப்பதாக நம்பப்படுகிறது.
2009 MACC சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக அவ்வாணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.