
குவந்தான், ஏப் 20 – குவந்தான் Balok கடற்கரையில் நேற்று 24 வயதான பெண் ஒருவர் மணல் திட்டுப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அலையில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. காலை மணி 8.37க்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து கெபெங் ( Gebeng) தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பஹாங் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை இயக்குநர் முகமட் சலாவுடின் ஈசா ( Mohd Salahuddin Isa) தெரிவித்தார். மணல் திட்டுப் பகுதியில் நீரின் ஆழம் சுமார் ஒரு மீட்டராக இருந்ததால், பாதிக்கப்பட்டவரைக் கடற்கரைக்குக் கொண்டுவர உறுப்பினர்கள் ஒரு ரப்பர் படகைப் பயன்படுத்தினர்.
அந்த இடம் குறுகிய நேரத்தில் நீரில் மூழ்கிவிடும் என்பதால், மணல் திட்டில் இருப்பதைத் தவிர்க்குமாறு முகமட் சலாவுடின் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், பார்வையாளர்கள் கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், குறிப்பாக நீர் மட்டம் உயரும் அட்டவணையைச் சரிபார்ப்பது குறித்தும் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.



