Latestமலேசியா

சிலாங்கூரில் நீண்டகாலமாகத் தொடரும் வெள்ளப் பிரச்னைக்கு முறையான தீர்வு காணப்படாதது குறித்து சிலாங்கூர் சுல்தான் கடும் அதிருப்தி

ஷா ஆலாம், ஏப்ரல்-20,

சிலாங்கூரில் நீண்டகாலமாகத் தொடரும் வெள்ளப் பிரச்னைக்கு முறையான தீர்வு காணப்படாதது குறித்து மாநில சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகத் தான் ஏற்கனவே வழங்கிய பல ஆலோசனைகளும் எச்சரிக்கைகளும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவும், ‘தாமரை இலைத் தண்ணீர்’ போலவும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என அவர் வேதனை தெரிவித்தார்.

அதிகாரிகள் இதில் கூடுதல் அக்கறை காட்டியிருக்க வேண்டு, காட்ட வேண்டும் என, சிலாங்கூர் சட்டமன்றத்தின் 15-ஆவது கூட்டத் தொடரை இன்று தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் வலியுறுத்தினார்.

நிர்வாகத் தரப்பு வெறும் திட்டங்களை மட்டும் தீட்டாமல், அவை அடிமட்டத்தில் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்று சுல்தான் கூறினார்.

குறிப்பாக, வடிகால் அமைப்புகளைச் சீரமைப்பதில் நிலவும் மெத்தனப்போக்கு மக்களின் துயரத்தை அதிகப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு முறையும் வெள்ளம் ஏற்படும் போது தற்காலிகத் தீர்வுகளை மட்டும் வழங்காமல், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நிரந்தரமான நீர் மேலாண்மைத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என அவர் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மக்களின் பாதுகாப்பு மற்றும் சொத்துகளைப் பாதுகாப்பது அதிகாரிகளின் முதன்மைப் பொறுப்பு என்றும் அவர் நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!