
நெகிரி செம்பிலான் சமஸ்தானாதிபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை (Tuanku Muhriz Tuanku Munawir) அரியணையிலிருந்து நீக்குவதாக, டத்தோ முபாராக் டோஹாக் (Datuk Mubarak Dohak) வெளியிட்ட அறிவிப்பை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை சுங்கை ஊஜோங் (Sungei Ujong) மண்டபத்தில் முபாரக் வாசித்த அந்தப் பிரகடனம் சட்டப்படி செல்லாது என, மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் தெளிவுபடுத்தியுள்ளார்.
முபாராக் டோஹாக் ஏற்கனவே சுங்கை ஊஜோங் ‘உண்டாங்’ (Undang) பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதால், அவருக்கு அத்தகைய அறிவிப்பை வெளியிட எந்த அதிகாரமும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
மரபு மற்றும் சடங்கு விதிகளை மீறிய 33 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஏப்ரல் 17-ஆம் தேதியே மாநில நீதி மற்றும் சட்ட மன்றத்தின் ஆலோசனையின்படி அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார்.
இந்நடவடிக்கை 1959-ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்புச் சாசனத்தின் 10 முதல் 12-வது பிரிவுகளுக்கு உட்பட்டது என்றும் மந்திரி புசார் உறுதிப்படுத்தினார்.
எனவே, துவாங்கு முஹ்ரிஸ் அவர்களே மாநிலத்தின் சட்டப்பூர்வமான ஆட்சியாளர் என்றும், அங்கீகரிக்கப்படாத இத்தகைய நடவடிக்கைகள் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் மாநில அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மலேசியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சற்று மாறுபட்ட ஆட்சியாளர் முறையை நெகிரி செம்பிலான் கொண்டுள்ளது.
உண்டாங் (Undang) என்றழைக்கப்படும் 4 முக்கிய மாவட்டத் தலைவர்களே மாநில சமஸ்தானாதிபதியை தேர்ந்தெடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடப்பு ஆட்சியாளரை அரியணையிலிருந்து இறக்குவதாக உண்டாங் அறிவித்திருப்பது, நெகிரி அரச சாசன நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது..



