
வாஷிங்டன், மார்ச்-13-கட்டாயத் தொழிலாளர் பிரச்னையைத் தடுப்பதில் தோல்வியடைந்ததாகக் கூறி மலேசியா உட்பட 60 நாடுகளை, USTR எனப்படும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.
தனிநபர்களை மிரட்டி, ஏமாற்றி அல்லது விருப்பத்திற்கு மாறாக, அபராதம் அல்லது தண்டனை பயங்காட்டி வேலை செய்ய வைக்கும் சட்டவிரோதச் செயலே கட்டாயத் தொழிலாளர் முறையாக அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், மலேசியாவின் வர்த்தக நடைமுறைகள் அநியாயமானவையா அல்லது பாகுபாடானவையா என்பதை இந்த விசாரணை ஆராயவுள்ளது.
பொது விசாரணை வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெறுகிறது; எழுத்து வடிவிலான கருத்துகளைச் சமர்ப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 15-தாகும்.
செம்பனை எண்ணெய், ரப்பர் கையுறைகள், மின்னணு உற்பத்தி போன்ற துறைகளில் மலேசியா முன்பே இந்த கட்டாயத் தொழிலாளர் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
விசாரணையில், மலேசியா விதிமுறைகளை பின்பற்றவில்லை என நிரூபிக்கப்பட்டால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் தடைச் செய்யப்படலாம்.
இது நாட்டின் பொருளாதாரத்தையும், அனைத்துலக வர்த்தகப் புகழையும் பாதிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.



