
ஷா ஆலாம், செப்டம்பர்-18,
சர்ச்சையாகியுள்ள கோலாலம்பூர் கம்போங் சுங்கை பாரு நில மறுமேம்பாட்டு விவகாரம் மிகுந்த கவனத்துடன், மலாய்க்காரர்களின் நலனை முன்னிலைப்படுத்தி கையாளப்பட வேண்டுமென, சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா ஆணையிட்டுள்ளார்.
கம்போங் பாருவை கால மாற்றத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்படுவதற்கு தடையில்லை என்றாலும், அதில் விதிமுறைகள் தெளிவாகவும் மலாய் சமூகத்திற்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும் என்றார் அவர் அவர்.
1899-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கம்போங் பாரு, மலாய் விவசாயக் குடியேற்றமாக அங்கீகரிக்கப்பட்டதை சுல்தான் ஷாராரஃபுடின் நினைவூட்டினார்.
அங்கு தான் 1946-ஆம் ஆண்டு அனைத்து மலாயா மலாய் மாநாடு நடைபெற்றது; அதுவே பின்னர் அம்னோ உருவாக்கத்துக்கு வழிவகுத்தது.
தவிர, 1969 மே 13 கலவரத்தின் போது, மலாய் மக்களுக்கு பாதுகாப்பு தளமாகவும் அது இருந்துள்ளது.
இவ்வாறாக கம்போங் பாரு, மலாய் மக்களின் எழுச்சியின் சின்னமாக இருந்து வருவதால், எதிர்காலத் தலைமுறைகளுக்காகவும், மலாய் மாண்பு மற்றும் நிலைத்தன்மைக்காகவும், எந்தவொரு மேம்பாட்டு முடிவாகினும், அது அந்த பெரும்பான்மை சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டே எடுக்கப்பட வேண்டுமென, இன்று வெளியிட்ட அறிக்கையில் சுல்தான் ஷாராஃபுடின் நினைவுறுத்தினார்.
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு சில குடியிருப்பாளர்களும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதும், கடந்த வாரம் குடியிருப்பாளர்களை வெளியேற்ற மேற்கொண்ட நடவடிக்கையின் போது அங்கு சலசலப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.