
கோலாலம்பூர், மார்ச்-19-மலாக்காவில் Kota Shahbandar-ரிலுள்ள கரோக்கே மையத்தில் ஞாயிற்றுக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தனது 20 வயது மகள் காணவில்லையென அவரது தாயார் திங்கட்கிழமை அதிகாலை மணி 1.17க்குப் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து , அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டுவரப்பட்டதாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் ( Zulkhairi Mokhtar ) தெரிவித்தார்.
வீட்டின் பின்புறக் கதவு வலுக்கட்டாயமாகத் திறக்கப்பட்டிருந்ததைக் கண்டதைத் தொடர்ந்து கரோக்கே மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தனது மகளை 22 வயது ஆடவர் தாக்குவதைக் கண்டு அவரது தாயார் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு அதிகாலை 4.41 மணிக்குப் பாதிக்கப்பட்ட பெண் ஆம்புலன்ஸ் மூலம் மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அப்பெண்ணின் தலையிலும் அவரது கன்னத்திலும் மென்மையான திசுக்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சுல்கைரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக இது தொடர்பாக வைரலான சிசிடிவி காட்சிகளில், தரையில் கிடந்த பாதிக்கப்பட்டப் பெண்ணைச் சந்தேக நபர் அடிப்பதும், அறைவதும், அவரது முடியைப் பிடித்து இழுப்பதும், மோட்டார் சைக்கிளால் அவரது தலையில் மோதுவதும் பதிவாகியிருந்ததாக சுல்கைரி சுட்டிக்காட்டினார்.
இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.



