மலேசியா

கலாச்சார இணைப்பு; கோலாலம்பூரில் ‘பொன்னோவியம் 2’ தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி திறப்பு

கோலாலாம்பூர், மே-24,

இந்தியாவின் மிக உன்னதமான பாரம்பரியக் கலை வடிவங்களுள் ஒன்றான தஞ்சாவூர் ஓவியக் கலையை மலேசிய மண்ணில் பறைசாற்றும் நோக்கில், “பொன்னோவியம் 2” ஓவியக் கண்காட்சி கோலாலம்பூரில் நேற்று மிகச் சிறப்பாகத் தொடங்கியது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தியப் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி. என். ரெட்டி மற்றும் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு, பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கேற்றி, ரிப்பன் வெட்டி கண்காட்சியை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட கலை ஆர்வலர்கள் திரண்டிருந்த இந்நிகழ்வில், கலைஞர் வல்லி சேவுகன் மற்றும் அவரது மாணவர்களின் அரிய தஞ்சாவூர் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து ‘வணக்கம் மலேசியா’வுக்குப் பேட்டியளித்த ஓவியக் கலைஞர் வல்லி சேவுகன், சிறு வயது முதலே இக்கலையின் மீது தமக்குள்ள ஈடுபாட்டைப் பகிர்ந்துகொண்டார்.

மலேசிய மண்ணில் இந்நிகழ்ச்சியின் மூலம் தனக்குக் கிடைத்துள்ள இந்த அளப்பரிய மகிழ்ச்சியும், மக்களின் பேராதரவும் தனது கலைப் பயணத்திற்கு மேலும் ஊக்கமளிப்பதாக அவர் சொன்னார்.

வணிக நோக்கமின்றி இந்தத் தெய்வீகக் கலையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தமது லட்சியம் என்றார் அவர்.

இவ்வேளையில், இந்தியாவின் பாரம்பரியக் கலை வடிவங்களை மலேசியத் தலைமுறையினரிடமும், பன்னாட்டுப் பயணிகளிடமும் கொண்டு சேர்ப்பதில் இக்கண்காட்சி மிக முக்கியப் பங்காற்றுகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சாரப் பிணைப்பு மேலும் வலுவடைவதாக, இந்தியத் தூதர் பி. என். ரெட்டி வருணித்தார்.

கலைஞர்களின் இத்தகைய முயற்சிகளுக்கு இந்தியத் தூதரகம் எப்போதும் முழு ஆதரவை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

வல்லி சேவுகன் மற்றும் அவரது மாணவர்களின் இந்த அசாத்தியக் கலைப்பணி வியக்க வைப்பதாகக் குறிப்பிட்ட செனட்டர் சரஸ்வதி, நமது பாரம்பரிய அடையாளங்களை மலேசியாவில் இவ்வளவு அழகாக மீட்டெடுத்துக் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

இத்தெய்வீக ஓவியக் கண்காட்சி வரும் மே 29-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளதால், உள்ளூர் கலை ஆர்வலர்கள் அனைவரும் திரளாக வந்து பேராதரவு தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

கலையும் பண்பாடும் ஒரு சமூகத்தின் ஆன்மா என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது இந்நிகழ்வு…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!