
மத்தியப் பிரதேசத்தில், சமோசா வாங்குவதற்காக ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தூருக்கு அருகே பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில், ரயிலிலிருந்து ஒருவர் இறங்கி தண்டவாளம் ஓரத்தில் உள்ள கடையில் சமோசா வாங்கிவிட்டு மீண்டும் ரயிலில் ஏறுவது பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவைத் தொடர்ந்து, தனிப்பட்ட தேவைக்காக ரயில் நிறுத்தப்பட்டதாக பலர் விமர்சித்தனர். இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த மேற்கு ரயில்வே, வீடியோவுடன் பரவி வரும் தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளது. பொறியியல் பணிகளுக்காக சிவப்பு சிக்னல் வழங்கப்பட்டதால் ரயில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்ததாகவும், ரயிலிலிருந்து இறங்கியவர் ரயில் ஓட்டுநர் அல்ல; கூடுதல் உதவி ரயில் ஓட்டுநர் என்றும் கூறியுள்ளது.
மேலும், சமோசா வாங்கிய சம்பவம் நடந்தது உண்மை என்றாலும், அதற்காக ரயில் நிறுத்தப்படவில்லை என இந்திய ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



