
கோலாலம்பூர், அக் 22 – சிலாங்கூர் மாநில காட்டுவளத்துறை நவம்பர் 15 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி வரை தனது மேற்பார்வையின் கீழ் உள்ள நிரந்தர வன கையிருப்பு பகுதிகள் மற்றும் வனத்துறையின் பூங்காக்களில் அனைத்து பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. அடுத்த மாத தொடக்கத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து பார்வையாளர்களுக்கு ஏற்படும் தேவையற்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிலாங்கூர் மாநில வனத்துறை இயக்குனர் அசார் அஹ்மட்
( Azhar Ahmad ) முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
சிலாங்கூரில் உள்ள Rimba Gabai, Gunung Nuang, Rimba Kanching, Sungai Chongkak, Sungai Sendat, Sungai Tekala, Sungai Tua, Ampang, Komanwel, Kota Damansara dan Templer ஆகிய காட்டுவள பூங்காக்கள் மூடப்படும். வடகிழக்கு பருவ மழை அடுத்த மாத தொடக்கத்தில் பெய்யக்கூடும் என இதற்கு முன் மலேசிய வானிலைத்துறையின் நடவடிக்கைக்கான துணை இயக்குனர் முகமட் ஹிசாம் முகமட் ஹனிப் தெரிவித்திருந்தார்.