
கங்கார், பிப்ரவரி-13 – நாட்டிலுள்ள 122,062 முதலாமாண்டு மாணவர்களில் இதற்கு முன் படிக்கத் தெரியாமலிருந்த 48,000 பேருக்கு, இப்போது படிக்க, எழுத மற்றும் எண்ணத் தெரிந்திருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் கல்வி அமைச்சினால் தொடங்கப்பட்ட தலையீட்டுத் திட்டத்தின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
இத்திட்டம், எழுத்தறிவு சவால்களை எதிர்கொள்பவர்களை ஆதரிப்பதிலும், அவர்கள் அத்தியாவசியத் திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் ஆசிரியர்களுக்கு உதவுவதாக, கல்வித் துணைத் தலைமை இயக்குநர் Dr ருஸ்மினி கூ அஹ்மாட் கூறினார்.
இந்த 48,000 பேரால் இப்போது படிக்க, எழுத, எண்ணத் தெரிந்திருப்பதானது, இத்திட்டத்தின் நேர்மறையான தாக்கத்திற்கு சான்று என அவர் சொன்னார்.
கூடுதல் ஆதரவு தேவைப்படுபவர்கள் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான அமைச்சின் கடப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.
கல்வி இடைவெளியைக் குறைக்க ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகம் உட்பட அனைத்து தரப்பினரிடமிருந்தும் தொடர்ச்சியான, கூட்டு முயற்சிகள் தேவை என்று ருஸ்மினி மேலும் கூறினார்.
பெர்லிஸ், கங்காரில் மாநில அளவிலான ‘Anak Kita: SPM 2025’ திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த Anak Kita திட்டமானது, நாட்டின் கல்வி முறையை பொருத்தமான, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த ஒன்றாக மாற்றுவதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.