
சிலாங்கூர், அக்டோபர் 23 – காஜாங், சுங்கை சூவா பகுதியிலுள்ள தொழிற்சாலையில் ஹீலியம் தொட்டி வெடித்ததில் 49 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று காலை 11.50 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. தீயணைப்புப் படையினர் நண்பகல் 12 மணிக்கு சம்பவ இடத்தைச் சென்றடைந்தனர்.
அந்த ஆடவரின் இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, அதிக அளவில் இரத்தம் வெளியேறியது. நண்பகல் 12.50 மணியளவில் அவர் உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சம்பவத்தின்போது, பழைய பொருட்களை அகற்றும் தொழிற்சாலையில் அவர் வெல்டிங் வேலை செய்துகொண்டிருந்ததாகச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரியெசல் அஸ்பார் (Ashrul Riezal Asbar) தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் அந்த ஆடவர் மட்டுமே பாதிக்கப்பட்டார். மீட்புப் பணிகள் முடிந்ததும், மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.



