
கோலாலம்பூர், ஏப்ரல்-10, சிலாங்கூர், காப்பாரில் கடந்தாண்டு விபத்துக்குள்ளான சிறிய இரக விமானத்தின் விமானி, சம்பவத்தின் போது குடிபோதையில் இருந்துள்ளார்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக அவர் மது அருந்தியிருந்ததாக, விமான விபத்து புலனாய்வுப் பிரிவான AAIB தனது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மதுபோதையால், விமானத்தின் முக்கியமான தருணங்களில் நிலைமையை துல்லியமாக மதிப்பிடுவதற்கும், அதற்கு ஏற்றவாறு பதிலளிப்பதற்கும் விமானியின் திறன் சமரசம் செய்யப்பட்டிருக்கலாம்.
மதுவோடு, விமானியின் ஆக்ரோஷமான பறக்கும் பாணியும் சேர்ந்துகொண்டதில், விமானத்தின் கட்டமைப்பு நெருக்கடியை சரியான நேரத்தில் அடையாளம் காண அவர் தவறியுள்ளார்.
இது நிலைமையை மேலும் மோசமாக்கியது என தனது185 பக்க அறிக்கையில் அப்பிரிவு கூறியுள்ளதாக, FMT செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரணையின் போது, விமானியின் லாக்கருக்கு அருகில் மதுபானம் மற்றும் மதுபானம் அல்லாத பானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன; ஆனால் சாட்சிகளின் வாக்குமூலங்களால் அவற்றின் உரிமையை உறுதிப்படுத்த முடியவில்லை.
என்றாலும், நீண்ட நேரத்திற்கு அதிக சுமையுடன் சென்றதே அவ்விபத்துக்கு முதன்மையானக் காரணமாக இருக்கலாம் என்று அறிக்கை முடிவுச் செய்துள்ளது.
விபத்து நடந்த இடத்தைச் சுற்றி பரவிக் கிடந்த விமானத்தின் உடைந்த பாகங்களை வைத்துப் பார்க்கும் போது, செம்பனைத் தோட்டத்தில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பே, நடுவானில் விமானத்தின் பெரிய கட்டமைப்பு பாகங்கள் அதிலிருந்து பிரிந்திருப்பதை AAIB அறிக்கை சுட்டிக்காட்டியது.
சிங்கப்பூரின் விமானப் பாதுகாப்பு தொழில்நுட்ப பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படும் Blackshape Gabriél BK 160TR விமானம், கடந்தாண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி, சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அசிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, காப்பார் நோக்கி மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அவ்விபத்து ஏற்பட்டது.
அதில் 30 வயது விமானியும் அவரது 42 வயது பயிற்சியாளரும் கொல்லப்பட்டனர்.