
பட்டர்வெர்த், ஜூலை 17 – பினாங்கு ஜாலான் ஜெட்டி லமாவில் உள்ள கடை வீடு கட்டிடத்தில் நேற்று ஒரு கார் மோதியதைத் தொடர்ந்து அந்த கட்டிடம் குடியிருப்பதற்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டுள்து.
மோதலின் தாக்கத்தால் கட்டிடத்தின் முன்பக்க அமைப்புக்கு கடுமையான சேதம் ஏற்பட்டதால் , சுவர் மற்றும் தரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும், இது மேலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக MBSP எனப்படும் செபராங் பிறை மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இடத்தை செபராங் பிறை டத்தோ பண்டார் டத்தோ படெருல் அமின் அப்துல் ஹமிட் ( Baderul Amin Abdul Hamid ) ஆய்வு செய்ததோடு , கட்டிடத்தின் முக்கிய ஆதாரத்தில் குறிப்பிடத்தக்க விரிசல்கள் இருப்பதோடு , கூரையும் நிலையற்றதாக இருப்பதை கண்டறிந்தார்.
சேதம் காரணமாக, செங்கல் மற்றும் கான்கிரீட் துண்டுகள் நடைபாதையிலும் சாலையிலும் சிதறிக்கிடந்தன, போதுமான பாதுகாப்பு கட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்தைச் சுற்றி இருந்தனர் என்று அந்த அறிக்கை விளக்கியது.
முதற்கட்ட ஆய்வில் கட்டிடத்தின் கட்டமைப்பு இனி பாதுகாப்பாக இல்லை என்றும், தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் வரை வளாகத்தில் உள்ள எந்தவொரு செயல்பாடும் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் செபெராங் பிறை மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.