
வத்திகன் சிட்டி, பிப்ரவரி-23 – நிமோனியா பாதிப்பால் ஒரு வார காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப்பாண்டவர் ஃபிரான்சிஸ், தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளார்.
நேற்று காலையில் அவருக்கு ஆஸ்மா சுவாச பிரச்னையும் ஏற்பட்டது.
இதனால் அவருக்கான ஆக்சிஜன் ஓட்டமும் அதிகளவில் தேவைப்பட்டதாக வத்திகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
விழிப்பு நிலையில் நாற்காலியில் சனிக்கிழமையைக் கழித்தாலும், முந்தைய நாளை விட நேற்று அவருக்கு வலி அதிகமாகவே இருந்தது.
இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க அவர் இரத்த மாற்றமும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் போப்பாண்டவர் ஆபத்தான கட்டத்திலிருந்து வெளியேறவுமில்லை, அதே சமயம் மரணத்தையும் நெருங்கவில்லை; சிகிச்சைகள் வேலை செய்ய கால அவகாசம் தேவையென, பிரபல அனுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
88 வயதான போப்பாண்டவர் ஃபிரான்சிஸ்,
பிப்ரவரி 14-ஆம் தேதி கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார்; ஆரம்பத்தில் சுவாசக் குழாய் தொற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், பின்னர் CT Scan செய்த பிறகு அவருக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா இருப்பதைக் கண்டறிந்தனர்.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரான்சிஸ், சுவாச நோய்த் தொற்றுகளால் அடிக்கடி பாதிக்கப்படக்கூடியவர்; இளைஞனாக இருக்கும் போதே அவர் கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு, அதனால் ஒரு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் குணமடைய உலகம் முழுவதும் கத்தோலிக்க தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.