
கிள்ளான், ஜூலை-16- கிள்ளானில், உணவகம் என்ற போர்வையில் வெளிநாட்டு பெண்களின் GRO சேவையை வழங்கி வந்த வணிகத் தளமொன்றின் நடவடிக்கை, நேற்றைய Ops Gegar சோதனையில் அம்பலமானது.
மாலை 6 மணிக்கு நடத்தப்பட்ட அந்த அதிரடிச் சோதனையில் ஓர் ஆண் உட்பட 12 வெளிநாட்டினர் கைதானதாக, குடிநுழைவுத் துறை கூறியது.
அவர்களில் 9 பேர் வியட்நாமிய பெண்கள், இந்தோனேசியா மற்றும் மியன்மாரைச் சேர்ந்த தலா ஒருவர் மற்றும் ஒரு மியன்மார் ஆடவர் ஆவர்.
அதிகாரிகளைக் கண்டதும் பலர் சிதறியோடிய வேளை, இன்னும் சில வெளிநாட்டினர் ஏதோ உள்ளூர் ஆட்களைப் போல் பாசாங்குக் காட்டினர்.
அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவும் முயற்சியாக, அப்பெண்களின் காதலர்கள் எனக் கூறிக் கொண்ட சில உள்ளூர் ஆடவர்களுக்கும், GRO பெண்களின் முதலாளிகளுக்கும் இடையே ஒரு போலி சண்டையும் அரங்கேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு பாலியல் சேவைகளையும் அப்பெண்கள் வழங்கி வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இரவில் திறந்தால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்து விடும் என்றெண்ணி, ‘புத்திசாலித்தனமாக’ தினமும் பிற்பகல் 2 மணிக்கே கடையை அவர்கள் திறந்து விடுகின்றனர்.
பாலியல் ரீதியான உறவுகளுக்கு 800 முதல் 1,200 ரிங்கிட் வரை வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கைதானவர்கள், விசாரணைகளுக்கு உதவும் வகையில் செமிஞ்சே குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.