Latestமலேசியா

கீழறுப்பு வேலைக் காரணமாகவே ஹம்சா உட்பட பெர்சத்து தலைவர்கள் நீக்கம்; முஹிடின் விளக்கம்

கீழறுப்பு வேலைக் காரணமாகவே ஹம்சா உட்பட பெர்சத்து தலைவர்கள் நீக்கம்; முஹிடின் விளக்கம்

கோலாலம்பூர், பிப்ரவரி-14,

துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் உள்ளிட்ட தலைவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை, பெர்சாத்து தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் இன்று விளக்கினார்.

இந்த முடிவு திடீரென்றோ கண்மூடித்தனமாகவோ எடுக்கப்படவில்லை என்றார் அவர்.

பல சந்திப்புகள், பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், ‘சிலர்’ தொடர்ந்து கட்சியை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கட்சிக்குள்ளேயே கீழறுப்பும் சதிநாச வேலைகளும் திரை மறைவிலும் வெளிப்படையாகவும் நடந்ததால், பெர்சாத்து பிளவுபடும் அபாயம் ஏற்பட்டது.

ஆனால் நீண்ட நாட்களாக பொறுமைக் காத்தும், நிலைமையில் முன்னேற்றம் இல்லாததால் வேறு வழியின்றி இம்முடிவுக்கு வர வேண்டியதாயிற்று.

_”கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் என்ற முறையில், கண்முன்னே கட்சி ‘அழிந்துபோவதை’ என்னால் சகித்துகொள்ள முடியாது. பெர்சாத்து வலுவாகவும், அதன் ஆரம்பப் போராட்டக் கோட்பாட்டில் நிலைத்திருக்கவும் செய்வது என் பொறுப்பு”_ என முஹிடின் வலியுறுத்தினார்.

இந்த விளக்கத்தின் மூலம், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், இந்த நடவடிக்கை பெர்சாத்துவின் நிலைத்தன்மைக்காக எடுக்கப்பட்டதாக புரிந்துகொள்ள வேண்டும் என்று, முன்னாள் பிரதமருமான அவர் தெரிவித்தார்.

கட்சி விதிகளையும் கட்டுப்பாடுகளையும் மீறியதாகக் கூறி, ஹம்சா உள்ளிட்ட 17 தலைவர்களை பெர்சாத்து கட்டொழுங்கு வாரியம் முன்னதாக கட்சியை விட்டே அதிரடியாக நீக்கியது.

பெர்சாத்து உட்பூசலின் உச்சக்கட்டமாகப் பார்க்கப்படும் இச்சம்பவம், எதிர்கட்சி கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஹம்சாவின் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி கேள்விக் குறியாகியுள்ளது.

பாஸ் கட்சியுடன் அவர் நெருக்கம் காட்டுவதால், ஒருவேளை அதன் ஆதரவுடன் அவர் எதிர்கட்சித் தலைவராகவும் தொடர வாய்ப்புள்ளது.

எனினும் தமது நீக்கம் குறித்த ஹம்சா இதுவரை கருத்துரைக்கவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!