
குற்றவியல் விசாரணைக்காக 36 ஆண்களுக்கு வலை வீசும் கோலாலம்பூர் போலீஸ்
கோலாலம்பூர், பிப்ரவரி 20 –
பல்வேறு குற்ற வழக்குகளின் விசாரணைக்கு உதவுவதற்காக 36 ஆண்களை கோலாலம்பூர் போலீஸ் குற்றப்புலனாய்வு துறை தேடி வருகிறது.
இவர்கள் உடலுக்கு சேதம் விளைவித்தல், ஆயுதம் பயன்படுத்தி கடுமையாக காயப்படுத்தல், கலவரம், வீடு புகுந்து திருடுதல் மற்றும் கொலை உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் (Datuk Fadil Marsus) தெரிவித்தார்.
தேடப்படும் அந்த நபர்கள் கோலாலம்பூர், சிலாங்கூர், ஜோகூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் பதுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக அந்த 36 நபர்களில் ஒருவனான கிள்ளான் பகுதியைச் சேர்ந்த லோ லை ஹுவாட் (Low Lye Huat) எனும் ஆடவன் மற்றவர்களை உடல் ரீதியாக காயப்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வருகின்றான்.
மேலும் கம்போங் கெரிஞ்சி (Kampung Kerinchi) குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஹமாட் நஸ்ஸீர் அப்துல் வஹாப்பும் (Ahmad Nazzer Abd Wahab) தாமான் செத்தாபாக் இண்டாவைச் (Taman Setapak Indah) சேர்ந்த பில்லி லியோங் லி சன்னும் (Billy Leong Li Sun) கலவரம் மற்றும் கடுமையான காயங்கள் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் போலீசாரால் வலை வீசி தேடப்பட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் பத்துமலையைச் சேர்ந்த மகேசன் எனப்படும் ஆடவன் கொலை வழக்கில் தேடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நபர்கள் குறித்து கூடுதல் தகவல் தெரிந்த பொதுமக்கள் சிறிதும் காலம் தாழ்த்தாமல் போலீசாரை அணுக வேண்டுமென்று கேட்டு கொள்ளப்படுகின்றனர்.



