கோலாலம்பூர், செப்டம்பர் -23 – குளோபல் இக்வான் நிறுவனத்துக்கு எதிரான விசாரணை எல்லை மீறுவதாகக் கூறப்படுவதை, தேசியப் போலீஸ் படைத் தலைவர் மறுத்துள்ளார்.
மாறாக, நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டே அவ்விசாரணைகள் நடைபெறுவதாக, தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் (Tan Sri Razarudin Husain) தெரிவித்தார்.
எங்கள் இஷ்டத்துக்கு எதுவும் நடப்பதில்லை; LHDN உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்போடே அனைத்தையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.
சிறார் துன்புறுத்தல் புகார் எழுந்ததை அடுத்து, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் குளோபல் இக்வான் நடத்தி வரும் 20 சிறார் இல்லங்களில் Op Global சோதனை நடத்தப்பட்டதிலிருந்து, அவ்விவகாரம் விஷ்வரூபம் எடுத்துள்ளது.
இதனிடையே, திரங்கானு குவாலா நெரூசில் குளோபல் இக்வான் நிறுவனத்துடன் தொடர்புப்படுத்தப்பட்ட குதிரையோட்ட பயிற்சி மையத்தில், சனிக்கிழமை போலீஸ் அதிரடிச் சோதனை நடத்தியது.
அதன் போது 13 குதிரைகளின் முன்னங்கால்களில் குளோபல் இக்வான் நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அதனை போலீசார் தம்மிடம் தெரிவித்ததாகக் கூறிய திரங்கானு சமய விவகாரத் துறையின் அமுலாக்கப் பிரிவு துணைத் தலைமை ஆணையர் Aizi Saidi Abdul Aziz, நேற்று தாமே நேரில் அங்கு சென்ற போது குதிரைகளைக் காணவில்லை என்றார்.
அக்குதிரையோட்ட பயிற்சி மையம், குளோபல் இக்வானைப் பின்பற்றுபவர்களால் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக நம்பப்படும், சுவர் கொண்ட ஆடம்பர கடற்கரை பங்களாவின் முன் அமைந்துள்ளது.
அச்சுவரில் எச்சரிக்கைத் தோரணையில் ஒட்டப்பட்டிருந்த வாசகங்களும் வைரலாகி கவனத்தைப் பெற்றுள்ளன.
அதாவது, “ஒரு தீர்வை நோக்கிப் பயணம் செய்யும் எங்களை எதிரியாகக் கருதி நடவடிக்கை எடுக்கும் போலீசை, மரணத்திற்குப் பிறகு இறைவன் பழிவாங்குவார்” என எழுதப்பட்டுள்ளது.