புத்ராஜெயா, ஜனவரி-2 – ஜனவரி 6-ஆம் தேதி புத்ராஜெயாவில் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு ஆதரவாக நடைபெறும் பேரணியில் பாஸ் கட்சியுடன் இணைந்து அம்னோ கண்டிப்பாக பங்கேற்கும்.
அக்கட்சியின் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அதனை உறுதிபடுத்தியுள்ளார்.
நஜீப்புக்கு ஆதரவாக 200 பேருந்துகளில் அம்னோ, பாஸ் கட்சி உறுப்பினர்கள் புத்ராஜெயா நோக்கி படையெடுக்கவுள்ளனர்.
பெர்சாத்து கட்சியினரும் அதில் பங்கேற்பர் என தெரிகிறது.
2022-ஆம் ஆண்டு Muafakat Nasional ஒத்துழைப்பு முறிந்த பிறகு, அம்னோவும் பாஸ் கட்சியும் மேற்கொள்ளும் முதல் ஒத்துழைப்பாக இது அமைகிறது.
இவ்வேளையில், பாஸ் கட்சியுடன் மேடையைப் பகிர்ந்து கொள்ளத் தயாராகியிருப்பதன் மூலம், ஒற்றுமை அரசாங்கத்திற்கான அம்னோவின் விசுவாசம் கேள்விக் குறியாகியிருப்பதாக, DAP தேசியத் தலைவர் லிம் குவான் எங் வெளியிட்ட கருத்தையும் சாஹிட் நிராகரித்தார்.
அது அவரின் சொந்தக் கருத்து; DAP-யின் நடப்புத் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை வைப்போம்; நமக்குள் பங்காளி சண்டை வேண்டாமென சாஹிட் கூறினார்.
நடப்புத் தலைமைத்துவம் என சாஹிட் குறிப்பிட்டது DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கை தான்; DAP-யில் தேசியத் தலைவர், துணைத் தலைவர் பதவிகள் இருந்தாலும், சக்தி வாய்ந்த பதவி என்னமோ பொதுச் செயலாளர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் உத்தரவு குறித்து அந்த முன்னாள் பிரதமர் செய்துள்ள மேல்முறையீடு ஜனவரி 6-ஆம் தேதி செவிமெடுக்கப்படுகிறது.
தனது எஞ்சிய சிறைக்காலத்தை வீட்டுக் காவலாக மாற்ற முன்னாள் பேரரசர் கூடுதல் உத்தரவுப் பிறப்பித்திருப்பதாகவும், அதனை அமுல்படுத்த அரசாங்கத்தை கட்டாயப்படுத்துமாறும் நஜீப் செய்த விண்ணப்பத்தை, முன்னதாக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்தே அவர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.