
கோலாலம்பூர், ஏப்ரல்-7- அமெரிக்கா கூடுதல் வரியை விதித்திருந்தாலும், தற்போதைக்கு மலேசியா பொருளாதார நெருக்கடியைச் சந்திக்காது என பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் இன்னமும் போட்டியிடும் ஆற்றலோடு தான் உள்ளது என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
என்ற போதிலும், அமெரிக்கா அறிவித்துள்ள 24 விழுக்காட்டு வரியால், 2025-ஆம் ஆண்டில் மலேசியா 4.5 % முதல் 5.5% வரையில் பதிவுச் செய்யுமென எதிர்பார்க்கப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதத்தை மறுஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றார் அவர்.
உண்மையில், மலேசியப் பொருட்களுக்கு 24 % வரியை கணக்கிடுவதற்காக அமெரிக்கா முன்வைக்கும் நியாயம் “அடிப்படையில் குறைபாடுடையது”.
அமெரிக்கப் பொருட்களுக்கு மலேசியா 47 % வரியை விதித்ததாக டோனல்ட் டிரம்ப் கூறுவதையும் அன்வார் மறுத்தார்.
எது எப்படி இருப்பினும் அமெரிக்காவுக்கு பதிலடியாக வரி விதிக்கும் எண்ணமேதும் மலேசியாவுக்கு இல்லையென, அவ்விவகாரம் குறித்து நேற்று வெளியிட்ட வீடியோவில் பிரதமர் சொன்னார்.
மாறாக, துல்லியமாக, விரைவாக அதே சமயம் நிதானமாக அவ்விவகாரத்தை மலேசியா கையாளும் என்றார் அவர்.
அவ்வகையில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியால் ஏற்படும் தாக்கம் குறித்த விரிவான அறிக்கையை, MITI எனப்படும் முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு அடுத்த வாரம் தாக்கல் செய்யும்.
கூடுதல் வரியால் அதிகப் பாதிப்பை எதிர்நோக்கும் துறைகளுக்கு எத்தகைய ஆதரவை அரசாங்கம் வழங்கலாம் என்பதை முடிவுச் செய்ய இந்த ஆய்வு அவசியம்.
அதே சமயம் ஒருங்கிணைந்த நடவடிக்கை குறித்து பேசுவதற்காக MITI அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ சா’வ்ருல் அசிஸ் இவ்வாரம் மெய்நிகர் வயிலாக ஆசியான் பொருளாதார அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்துவார்.
மக்களின் நல்வாழ்வும் தொழில்துறையின் வளர்ச்சியும் பேணப்படுவதை உறுதிச் செய்ய அனைத்து தேர்வுகளும் ஆராயப்படும்.
மடானி அரசாங்கம், நாட்டு நலனையும் மக்களின் நலனையும் ஏற்றுமதியாளர்களின் நலனையும் பாதுகாக்கும் என டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்