
கூலாய், ஏப்ரல்-9, ஜோகூர் கூலாயில் கடந்த வெள்ளிக்கிழமை 2 இடங்களில் பாராங் கத்தி ஏந்திக் கொள்ளையிட்ட ஆடவன், இரண்டே மணி நேரங்களில் போலீஸிடம் பிடிபட்டான்.
ஜாலான் ஸ்ரீ புத்ராவில் ஓர் உணவகத்தின் பின்னால் நிகழ்ந்த முதல் சம்பவத்தில், 52 வயது இந்தோனேசிய மாது கொள்ளையிடப்பட்டு, பாராங் கத்தி வெட்டுக்கும் ஆளானார்.
காலை 8.30 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் அம்மாது இடது கையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அதே நாளில் போலீஸுக்கு இன்னொரு புகார் கிடைத்ததாக, கூலாய் போலீஸ் தலைவர் துணை ஆணையர் தான் செங் லீ கூறினார்.
அதில், தாமான் இம்பியான் செனாய், ஜாலான் இம்பியான் செனாய் உத்தாமாவில், 36 வயது பெண் பாராங் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டார்.
இதையடுத்து தகவல் கிடைத்த கையோடு விசாரணையில் இறங்கிய போலீஸ், காலை 10 மணிக்கெல்லாம் 40 வயது உள்ளூர் ஆடவரைக் கைதுச் செய்தது.
ஜாலான் ஸ்கூடாய் – கேலாங் பாத்தா சாலையில் உள்ள எண்ணெய் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த போது சந்தேக நபர் சிக்கினார்.
குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் அவனுக்கு 15 குற்றப்பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
கைதான போது போதைப்பொருளும் உட்கொண்டிருந்தான்.
அவனிடமிருந்து ரொக்கப் பணம், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணைக்காக ஏப்ரல் 11 வரை அவ்வாடவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.