கெந்திங் மலையில் சுற்றுலாப் பேருந்துகள், சொகுசு கார் மோதி கோர விபத்து; நேப்பாள நாட்டினர் 7 பேர் காயம்

பெந்தோங், மே-31,
கெந்திங் ஹாட்ஸிலிருந்து கெந்திங் செம்பா நோக்கி இறங்கும் சாலையில் இரு சுற்றுலாப் பேருந்துகள் மற்றும் ஒரு எஸ்.யூ.வி (SUV) ரக கார் சம்பந்தப்பட்ட ஒரு கடுமையான சாலை விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த ஒரு பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சனிக்கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் கிலோமீட்டர் 15-ல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்துக்குள்ளான ஒரு பேருந்தில் 36 நேபாள நாட்டினர் பயணம் செய்துள்ளனர்.
பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் காயமடைந்ததாக பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி முகமது சலாவுதீன் ஈசா தெரிவித்துள்ளார்.
வங்காளதேசம் மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்த 34 பயணிகளுடன் வந்த மற்றொரு சுற்றுலாப் பேருந்தில் இருந்தவர்கள் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக தப்பினர்.
அதேபோல், மோதிய பெருடுவா அரூஸ் காரில் இருந்த மூவரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்கு முன்பாகவே பயணிகள் அனைவரும் வாகனங்களில் இருந்து பத்திரமாக வெளியேறினர்.
காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், விபத்து நடந்த பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவை தீயணைப்பு வீரர்கள் தூய்மைப்படுத்தினர்.



