
கோலாலம்பூர், மே-30-காப்பிக் கடை ஒன்றில் இனப் பாகுபாடின்றி நிகழ்ந்த நெகிழ்ச்சியான மனிதநேயச் சம்பவம் ஒன்றைக் கண்ணுற்று, அதனைத் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையாகப் பகிர்ந்து பாராட்டியுள்ளார் செனட்டர் Dr லிங்கேஸ்வரன் ஆர் அருணாச்சலம்.
இன்று காலை Coffee Bean உணவகத்தில் லிங்கேஸ்வரன் இருந்தபோது, அங்கு வந்த முதிய சீன ஆடவர் ஒருவர், ஆதரவற்ற நிலையில் உதவி கேட்டு ஒவ்வொரு மேசையாகச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு அமர்ந்திருந்த Siti Zulaiqah
என்ற இளம் மலாய் பட்டதாரிப் பெண், எவ்விதத் தயக்கமும் இன்றி அந்த ஆடவரைத் தன்னுடனே சேவை முகப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அவருக்குப் பிடித்த உணவு மற்றும் பானங்களைத் தேர்வு செய்யச் சொல்லி, அதற்கான பணத்தையும் அவரே இன்முகத்தோடு செலுத்தினார்.
எந்தவொரு விளம்பரமோ, கேமராவோ இன்றி, தூய மனதுடன் நடந்த இந்த சிறு உதவி செனட்டரை நெகிழச் செய்துள்ளது.
‘இவரே ஒரு உண்மையான கதாநாயகி’ என்று புகழ்ந்துள்ள Dr லிங்கேஷ்வரன், நம் சமூகத்தில் இனம், மதம் கடந்து இன்னும் மனிதாபிமானமும் ஒற்றுமையும் உயிர்ப்புடன் இருப்பதற்கு Siti Zulaiqah ஒரு சிறந்த உதாரணம் என்று மனதாரப் பாராட்டியுள்ளார்.
நாம் அனைவரும் கனவு காணும் ஒரு மலேசியாவுக்கு இதுபோன்ற மனிதநேயமே உந்துசக்தி எனக் கூறி தனது வாழ்த்துகளையும் நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.



