
செப்பாங், அக்டோபர் -8,
“கேப்டன் பிரபா” எனப்படும் குற்றக்கும்பலைச் சார்ந்த 13 ஆண்கள் இன்று செப்பாங் நீதிமன்றத்தில் (Mahkamah Sesyen) குற்றம் சாட்டப்பட்டனர்.
கடந்த 2023 டிசம்பர் மாதம் முதல் இவ்வாண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி வரை, லங்காட் ஜெஞ்சாரம் பகுதியிலுள்ள செம்பனைத் தோட்டத்தில் அமைப்புசார் குற்றச் செயல்களில் ஈடுபட்ட அவர்கள் அனைவரும் SOSMA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, போலீசார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது இந்தக் கும்பலை கைது செய்ததைத் தொடர்ந்து அவர்களின் குற்றங்கள் ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் மறுத்து, நவம்பர் 10 ஆம் தேதி அன்று வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
இந்த கும்பல் கொலைகள், வன்முறைச் சம்பவங்கள், கொள்ளைகள் போன்ற 80 குற்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர்கள் இளம் வயதினரை தங்கள் குழுவில் சேர்த்துக் கொண்டு சக்தி மற்றும் பணம் தேடும் நோக்கில் செயல்பட்டு வந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டது.
இந்தக் கும்பல் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைகளில் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டனர் என்று
தேசிய காவல்துறை தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.