
கோலாலம்பூர், நவம்பர்-20 – கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதால், இந்த மண்டல மகர விளக்கு பூஜை காலத்தில் சபரிமலைக்குச் செல்லும் மலேசிய ஐயப்ப பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மலேசிய ஐயப்ப சுவாமி சேவா சங்கத்தின் தலைவர் யுவராஜா குருசாமி அவ்வாறு நினைவூட்டியுள்ளார்.
அரிதான ஆனால் மிக ஆபத்தான இந்த அமீபா மூளைத் தொற்று, கழிவுநீர் மூக்குக்குள் செல்வதால் மட்டுமே ஏற்படுகிறது…குடிநீர், உணவு, தொடுதல் அல்லது காற்று மூலம் இது பரவாது.
எனவே, மலேசிய ஐயப்ப பக்தர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சேவா சங்கம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக பாம்பா நதி மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்கும்படி பக்தர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
குளிக்கும் போது மூக்கு கிளிப் அணிவது, திருவாங்கூர் தேவஸ்தானம் குறிப்பிட்ட குளியல் இடங்களையே பயன்படுத்துவது, தலை முழுக்க நீரில் மூழ்குவதை தவிர்ப்பதும் முக்கியமாகும்.
கூடுதல் பாதுகாப்புக்கு, ஹோட்டல் குளியறையில் குளிக்கவும்.
அதே சமயம் மூக்கை சுத்தம் செய்யும் போது கொதிக்கவைத்து குளிர்ந்த தண்ணீர் அல்லது பாட்டில் தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஒருவேளை 1 முதல் 7 நாட்களுக்குள் கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி, கழுத்து வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
சபரிமலை தரிசனம் சிறப்பாகவும் அதே சமயம் பாதுகாப்பாகவும் இருக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனமாக இருக்கும்படி யுவராஜா குருசாமி கேட்டுக் கொண்டார்.
அக்டோபர் வரையிலான நிலவரப்படி கேரளாவில் இந்த அமீபா தொற்று 70 பேருக்கும் மேல் உறுதிச் செய்யப்பட்டு, 19 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அண்டை மாநிலங்களான கர்நாடாகா, தமிழகம் உள்ளிட்டவையும் பயண ஆலோசனை வழங்கியுள்ளன.
குறிப்பாக கர்நாடகாவில் இதுவரை எந்த தொற்றுச் சம்பவமும் பதிவாகவில்லை என்றாலும், சபரிமலை காலத்தில் மாநிலங்களுக்கு இடையேயான ஐயப்ப பக்தர்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு அது எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமீபா தொற்றால் சில நாட்களிலேயே மூளை வீக்கம் ஏற்பட்டு மரணத்தில் போய் முடிகிறது.
எனவே ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மட்டுமே சிகிச்சைப் பலனளிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.



