
பொகோத்தா, ஆகஸ்ட்-11-தென்னமரிக்க நாடான கொலம்பியாவில் ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில், இதுவரை குறைந்தது 132 பேர் பலியாகியுள்ளனர்.
அதே சமயம் 570 பேர் வரை காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 86 கட்டடங்கள் இடிந்து விழுந்து, 7 விமான நிலையங்களில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தின் தாக்கம் தீவிரமாக இருந்ததால், தலைநகர் போகோத்தா (Bogota) உள்ளிட்ட பல பகுதிகள் குலுங்கி, உயரமான கட்டடங்கள், அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
நகரம் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்ட நிலையில், மீட்புக் குழுவினர் மற்றும் அவசரகாலப் படையினர் உடனடியாகக் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்பதால் மரண எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்களை தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் சேகரித்து வருகிறது.
மேலும், பின்அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொலம்பியா முழுவதும் 5 நகரங்களுக்கு சிவப்புக் கட்ட அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



