கோத்தா கினாபாலு பள்ளி மாணவி தாக்குதல்: 7 மாணவர்கள் கைது

கோத்தா கினபாலு, மே-29 – சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ ஒன்றில், சபாவில் 13 வயது பள்ளி மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு உதவுவதற்காக 7 இடைநிலைப் பள்ளி மாணவர்கள் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
15 முதல் 17 வயதுக்குட்பட்ட 6 மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் உட்பட அனைத்து சந்தேக நபர்களும் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கைதுச் செய்யப்பட்டதாக, கோத்தா கினாபாலு போலீஸ் கூறியது.
இதில் அந்த ஒரே மாணவன் தான், இந்த முழு சம்பவத்தையும் வீடியோ எடுத்ததாக நம்பப்படுகிறது.
வாட்சப் குழுவில் ஏற்பட்ட தவறான புரிதலே இச்சம்பவத்திற்கு காரணம் என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவியும் சந்தேக நபர்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
கடந்த மே 22-ஆம் தேதி, பாதிக்கப்பட்ட மாணவி இரண்டு சந்தேக நபர்களால் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், பின்னர் மற்ற 5 மாணவிகளால் சூழப்பட்டு தாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
தற்போது இச்சம்பவம், கலவரம் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய குற்றங்களுக்காக குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



