
புத்ராஜெயா, ஆகஸ்ட் 28 – நாட்டில் கோழி முட்டைகளின் விநியோகம் போதுமானதாகவும், நிலையானதாகவும் உள்ளது என்றும் தற்போதைய உள்ளூர் உற்பத்தி உள்நாட்டு தேவையை விட அதிகமாக இருக்கின்றதென்றும் கால்நடை சேவைகள் துறையின் (DVS) தரவுகள் தெரிவிக்கின்றன.
வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு (KPKM) வெளியிட்ட அறிக்கையில், ஆகஸ்ட் 1 முதல் முட்டை மானியங்களில் செய்யப்பட்ட மறுசீரமைப்பைத் தொடர்ந்து, உற்பத்தி நிலைமைக்கு ஏற்ப தொழில் துறை அவ்வப்போது திறந்த சந்தை விலைகளை மதிப்பாய்வு செய்து சரிசெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, கிரேடு A, B, மற்றும் C முட்டைகளின் விநியோகம் நிலையாக உள்ளதையும், அவை பல்பொருள் அங்காடிகளில் எளிதில் கிடைக்கின்றன என்றும், சிறப்பு தர (special grade) முட்டைகளும் நியாயமான அளவில் சந்தையில் உள்ளன என்றும் KPKM மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மேலும், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு முட்டை விலைகளைக் கவனித்து வருவதாகவும், அதிக லாபம் ஈட்டும் முயற்சிகள் அல்லது செயற்கை விலை உயர்வுகள் கண்டறியப்பட்டால், நடைமுறையிலுள்ள சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.