
கோத்தா திங்கி, , ஏப்ரல்-19 – இன்று மதிய நேரத்தில் ஜோகூர் கோத்தா திங்கி, தாமான் கோத்தா ஜெயா பகுதியில் உள்ள உணவகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூவர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்தை மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்ட் யூசுப் ஒத்மான் உறுதிப்படுத்தியுள்ளதுடன், உயிரிழப்பின் சரியான எண்ணிக்கையை வெளிப்படுத்த மறுத்தார்.
“போலீசார் சம்பவ இடத்தில் உள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது,” என அவர் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச்சூடு மதியம் 1.45 மணியளவில் “மெடான் செலேரா தாமான் கோத்தா ஜெயா” உணவகத்தில் நடந்தது.
“சுமார் 50 வயதில் இருக்கும் ஒருவர் உள்ளே நுழைந்து பல முறை துப்பாக்கி சூடு நடத்தினார். குறைந்தது மூவர் தாக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் கடை உரிமையாளர் என நம்பப்படுகிறது,” என உள்ளூர் வாசி தெரிவித்ததாக NST தகவல் வெளியிட்டுள்ளது.
சம்பவத்திற்குப் பின்னர், சந்தேக நபர் சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு உணவகத்திற்கு சென்று அமைதியாக அமர்ந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சந்தேக நபரை கைது செய்ததாக அறியப்படுகிறது.



