
கோப்பெங், மார்ச்-29-பேராக், கோப்பெங் தமிழ்ப் பள்ளியின் 80-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ஒரு முக்கியமான மறுமேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டு, பள்ளியின் முதன்மைக் கட்டடம் மிக மோசமான நிலையில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, 13-ஆம் மலேசிய திட்டத்தின் கீழ், அக்கட்டடத்தை மீண்டும் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, கல்வித் துணையமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
மொத்தம் RM14.5 மில்லியன் மதிப்பிலான இத்திட்டத்தின் கீழ், 6 வகுப்பறைகள், நிர்வாக அலுவலகம், ஆசிரியர் அறை மற்றும் விளையாட்டுப் பொருட்கள் அறை கட்டப்படவுள்ளன.
அதே சமயம், RBT அறை, அறிவியல் ஆய்வுக் கூடம், ஆலோசனை அறையும் அமைக்கப்பட்டு, பள்ளியின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
இந்த மறுமேம்பாட்டுப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக, முன்னதாக அப்பள்ளிக்கு வருகை மேற்கொண்ட துணையமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாண்டு இறுதிக்குள் டெண்டர் விடப்பட்டு, 22 மாதங்களில் நிர்மாணிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
நாட்டின் கல்வி வசதிகளை மேம்படுத்தும் மடானி அரசின் கடப்பாட்டை இத்திட்டம் புலப்படுத்துவதாக வோங் கா வோ கூறினார்.
துணையமைச்சருடன், பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ A. சிவநேசன், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துள்சி மனோகரன் உள்ளிட்டோரும் பள்ளிக்கு வருகைத் தந்தனர்.



