
பங்கோர், மார்ச் 2 – பங்கோர் தீவில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மாசிமகம் திருவிழா நேற்று மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
இந்த ஆலயத்திற்கு மலேசியாவின் பல மாநிலங்களிலிருந்து வருகை அளித்த பக்தர்கள் கரகம், பால் குடம் , அலகு கத்தியும் தங்கள் காணிக்கையை செலுத்தினர்.இதில் அதிகமான சீனர்களும் தங்களின் காணிக்கையை செலுத்தியது பலரின் கவனத்தை ஈர்த்தது.
இத்திருவிழாவிற்கு இந்தியா இந்தோனேசியா உட்பட பல உலக நாடுகளைச் சேர்ந்த சுற்றுப் பயணிகளும் வருகை புரிந்திருந்தனர்.
சுங்கை பினாங் பெசார் பகுதியில் அமைந்துள்ளது சுமார் 100 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயம் இந்திய குடியேற்றவாசிகளால், ஆரம்பத்தில் எளிமையான முறையில் நிறுவப்பட்டது. பின்னர் நவீன அடையாளமாக சுமார் 2019இல் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது.
ஆரம்ப கால இந்திய குடியேற்றவாசிகளால், முக்கியமாக தீவில் வேலை செய்த மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களால் நிறுவப்பட்ட இந்த ஆலயம் பல உலக நாடுகளில் இருந்து சுற்றுப் பயணிகளை கவரும் இடமாகவும் விளங்கி வருகிறது.



