
கோலாலம்பூர், மார்ச்-27- ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம் வீற்றிருக்கும் நிலத்தை Jakel குழுமத்திடம் விற்றது யாரென்பது குறித்து, ஏன் ஒரு விசாரணையும் இல்லையென, பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோலாலம்பூரில் இது போல் இன்னும் எத்தனை நிலங்கள் அந்த தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளன என்றும் அவர் வினவினார்.
ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன், வெளிப்படைத்தன்மை குறித்தும் சீர்திருத்தங்கள் குறித்தும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முழங்கினார்.
ஆனால், இந்த ஆலய நில விற்பனை குறித்து அவரின் மடானி அரசாங்கம் விசாரிக்கத் தயங்குவது ஏன் என, பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்துப் பிரிவின் துணைத் தலைவருமான சஞ்சீவன் கேட்டுள்ளார்.
தற்போது ஆலயம் இடமாறுவதற்கு அதன் நிர்வாகம் ஒப்புக் கொண்டு, ஒரு தீர்வு எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இனிவரும் காலங்களில் ஆலயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை முன்னின்று கையாள, தேசிய இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்பட வேண்டுமென சஞ்சீவன் பரிந்துரைத்துள்ளார்.
இந்த ஜாலான் மஸ்ஜிட் இந்தியா ஆலய விவகாரம் போன்று மீண்டும் நிகழாதிருக்க, அந்த அறப்பணி வாரியம் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என அவர் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.