
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – கோலாலம்பூரில் காற்பந்து மைதான வளாகத்திற்கு வெளியே உள்ள பகுதியில் தனிநபர்களைக் கொண்ட குழுவினரிடையே நடந்த சண்டை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு மணி 11.15க்கு நடந்த அந்த தகராறு குறித்து மைதான ஊழியர்கள் புகார் செய்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையை மதிப்பிட்டுச் சென்றதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan ரிட்சுவான் காலிட் ( Ridzuan Khalid ) தெரிவித்தார்.
போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்தபோது, நிலைமை அமைதியாகி, தகராற்றில் ஈடுபட்ட குழுவினர் கலைந்து சென்றது கண்டறியப்பட்டது. இதுவரை, காயங்கள் ஏற்பட்டதாக எந்தவொரு தரப்பினரிமிருந்து புகார் எதுவும் பதிவாகவில்லையென ரிட்சுவான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தின் காணொளியை பொதுமக்கள் ஒருவர் பதிவு செய்தபோதிலும் அவருடன் போலீஸ் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதோடு இது தொடர்பான வீடியோ ‘ஏர் டிராப்’ மூலம் பகிரப்பட்டது. இந்த சண்டையில் கால்பந்து அணி ஆதரவாளர்கள் யாரும் ஈடுபடவில்லை. போலீசார் வந்தவுடன் அவர்கள் கலைந்து சென்றதால், குற்றவாளிகளையும் அடையாளம் காண முடியவில்லை.
இன்றுவரை, இச்சம்பவம் குறித்து போலீஸ்துறைக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்பதால் இச்சம்பவம் தொடர்பாக, புகார் அளிக்க முன்வரும்படி பொதுமக்களை ரிட்சுவான் கேட்டுக்கொண்டார்.