
கோலாலம்பூரில் பங்களாவில் விபச்சாரம் நடத்திவந்த கும்பல் முறியடிப்பு -40 பேர் கைது
கோலாலம்பூர்,பிப்ரவரி 13 –
கோலாலம்பூரில் Desa Pahlawan ஆடம்பர குடியிருப்பு பகுதியில் மூன்று மாடிகள் கொண்ட பங்களாவில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையைத் தொடர்ந்து விபச்சாரக் கும்பலின் முக்கிய மூளையாக செயல்பட்ட சீனாவைச் சேர்ந்த ஆடவன் உட்பட 40 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
பிப்ரவரி 12 ஆம்தேதி வியாழக்கிழமை அதிகாலை மணி 12.27 இல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 21 மற்றும் 43 வயதுக்கிடையிலான வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
சீனாவைச் சேர்ந்த 11 ஆடவர்களுடன் 19 பெண்களும் வியாட்னாமைச் சேர்ந்த 5 பெண்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் மியன்மார் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த தலா இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்தாக குடிநுழைவுத்துறையின் நடவடிக்கைக்கான துணை இயக்குநர் டத்தோ லொக்மான் எப்பெண்டி ரம்லி ( Lokman Effendi Ramli ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த கும்பலுக்கு பின்னணியாக செயல்பட்ட ஆடவருடன் சீனாவைச் சேர்ந்த மற்றொரு ஆடவரும் செல்லத்தக்க வேலை பாஸ்களை வைத்திருந்தனர்.
கைது செய்யப்ப்டட சில வெளிநாட்டினர் இந்நாட்டில் தங்கியிருந்ததற்கான முறையான ஆவணங்களை கொண்டிருக்கவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கையின்போது 29 சீன கடப்பிதழ்கள், 5 வியட்னாமிய கடப்பிதழ்கள் இரண்டு ஜப்பானிய கடப்பிதழ்களுடன் சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து கிடைத்ததாக நம்பப்படும் 26,600 ரிங்கிட் ரொக்கம் மற்றும் இரு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.



