கோலாலம்பூர், நவம்பர்-10, குடிநுழைவுத் துறை அதிகாரிகளை கடமையைச் செய்ய விடாமல் தடுக்க முயன்ற ஆடவன், தலைநகரிலுள்ள பிரபல கேளிக்கை மையத்தில் கைதானான்.
தனது கைப்பேசியைத் திருடிகொண்டு ஓடியவனைத் துரத்தி வந்ததாக அவன் கூறியதும் பொய்யெனக் கண்டறியப்பட்டது.
உண்மையில், சோதனைக்கு வந்த அதிகாரிகளிடமிருந்து தப்பியோட வெளிநாட்டு GRO பெண்களுக்கு குறுக்கு வழியைக் காட்டவே அவன் ஓடி வந்துள்ளான்.
இவ்வேளையில், அங்கு வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வந்த வெளிநாட்டுப் பெண்கள் பலர் மேடைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒழுங்கீன நடவடிக்கைகள் குறித்து பொது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அந்த Ops Gegar சோதனையில் மொத்தமாக 89 பேர் கைதாகினர்.
அவர்களில் 61 தாய்லாந்து நாட்டுப் பெண்கள், 10 வியட்நாமியர்கள், 6 வங்காளதேச ஆடவர்களும் அடங்குவர்.
முறையான பயணப் பத்திரம் இல்லாதது, பெர்மிட்டைத் தவறாகப் பயன்படுத்தியது, அனுமதிக்கப்பட்டதை விட அதிக நாட்கள் இந்நாட்டில் தங்கியிருந்தது, கள்ளக்குடியேறிகளை பாதுகாத்து வந்தது போன்ற குற்றங்களுக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூரைச் சேர்ந்த 8 ஆடவர்களும் ஒரு பெண்ணும் விசாரணைக்குக் கைதாகியுள்ளனர்.