
கோலாலம்பூர், நவம்பர்- 3,
நேற்று அதிகாலை, கோலாலம்பூர் காராக் நெடுஞ்சாலையின் 42.2 வது கிலோமீட்டரில், காராக்கை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனமொன்று மோதியதில் நடைப்பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் தொடர்புடைய அந்த வாகனமோட்டி சம்பவத்திற்கு பிறகு தப்பியோடியதைத் தொடர்ந்து, போலீசார் அந்நபரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் சம்பந்தப்பட்ட வாகனத்தின் வகை மற்றும் பதிவு எண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹாம் முகமட் கஹார் (Superintendan Zaiham Mohd Kahar) தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் 50 வயதிருந்து 60 வயதிற்குற்பட்ட மலேசிய ஆடவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விபத்து நேரத்தில் அவர் எந்தவொரு அடையாள ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்றும் சம்பவ இடத்தில், நீலம் மற்றும் வெள்ளை நிற மேல்சட்டை அணிந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விபத்தை நேரில் கண்டவர்கள் யாராக இருந்தாலும் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மிக முக்கியமாக தப்பியயோடிய வாகனமோட்டியை அடையாளம் காணுவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமென்று ‘Zaiham’ தெரிவித்தார்.
அதே வேளை, வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினர் யாராவது காணாமல் போயிருந்தால், உடனடியாக பெந்தோங் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவுக்கு வந்து அடையாளம் காணும் செயல்முறையில் உதவுமாறும் போலீஸ் தரப்பு கேட்டுக்கொண்டது.



