
கோலாலம்பூர், நவம்பர் 26 – கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் வெள்ளம் அதிகரித்ததால், மலேசிய விலங்குகள் பாதுகாப்பு சங்கமான SAFM விலங்குகளைக் காப்பாற்ற தயார் நிலையில் உள்ளது.
NADMA அதாவது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ உறுப்பினரான SAFM, தேவையெனில் விலங்குகள் பேரிடர் மீட்பு அணியை (Animal Disaster Response Unit) உடனடியாக செயல்படுத்தவுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய செல்லப்பிராணிகள் மற்றும் தெருவிலங்குகளை மீட்பதே இவர்களின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகின்றது. மேலும் பாதிக்கப்பட்ட விலங்குகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் SAFM-மிடம் தெரிவிக்கலாம்.
அதேபோல், மீட்பு பணியில் கலந்து கொள்ள விரும்புவோர் SAFM தன்னார்வ குழுவில் இணைந்து பொதுமக்களுக்கு உதவலாம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களுக்கு விலங்கு உணவுகளை வழங்க SAFM ஆயத்தமாகி வருகின்றது.



