
கோலாலாம்பூர், செப்டம்பர்-30,
Menara KL எனப்படும் கோலாலம்பூர் கோபுரத்தின் வரவேற்பு சுவரில் தமிழ் மொழி இடம் பெறாத விஷயம் வைரலான நிலையில், தொடர்புத் துறை அமைச்சின் உடனடி தலையீட்டில் அப்பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
மலேசியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் தமிழ் மொழி மட்டுமல்லாமல், கடசான் – இபான் மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
அம்மூன்று மொழிகளும் அங்கு இடம் பெற்றிருப்பதை இன்று காலை நேரில் சென்று கண்ட போது தியோ நீ சிங் அவ்வாறு சொன்னார்.
அவருடன் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவும் உடனிருந்தார்.
அந்த ‘Welcome Hall’ வரவேற்பு சுவர் உண்மையில் 2021 நவம்பரில் நிறுவப்பட்டதாகவும், மலாய், ஆங்கிலம், மாண்டரின், அரபு, ஜப்பான் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட உலக மொழிகளைக் காட்டுவதாகவும் நீ சிங் விளக்கினார்.
மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் புரிந்துகொண்டு உடனடி நடவடிக்கையில் இறங்கிய துணையமைச்சருக்கு கணபதிராவ் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
அந்த வரவேற்பு சுவரில் ‘நமஸ்தே’ என்ற சமஸ்கிருத மொழியெல்லாம் இடம் பெற்ற நிலையில், நாட்டின் முக்கிய மொழிகளில் ஒன்றான தமிழ் இல்லாதது குறித்து உள்ளூர் தமிழ் ஊடகங்கள் இம்மாதத் தொடக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தன.
இது, தியோ நீ சிங் காதுகளுக்கு எட்டி, உரிய மாற்றங்களை மேற்கொள்ளுமாறு செப்டம்பர் 9-ஆம் தேதியே அவர் உத்தரவிட்டார்.
கோலாலாம்பூர் கோபுர நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு 20 நாட்களுக்குள் தமிழுக்கு அங்கு உரிய இடத்தைத் தந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.