
புத்ராஜெயா, செப்டம்பர்-20,
நாட்டில் கோவிட்-19 தொற்றால் ஒரு புதிய மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
மரணமடைந்தவர், படுக்கையிலிருந்த 91 வயது நபராவார்.
இதையடுத்து, இவ்வாண்டு இதுவரை 3 மரணங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
இவ்வேளையில் XFG என்ற புதிய வகை கோவிட் பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது; 35-ஆவது வாரத்தில் பதிவான மொத்த கோவிட் பாதிப்புகளில் இப்புதிய வகை தொற்று 8.2 விழுக்காட்டை உட்படுத்தியதாக அவர் சொன்னார்.
ஆனால், புதிய தொற்று சம்பவங்கள் 12.8 விழுக்காடு குறைந்துள்ளன; கடந்த வாரம் 681-ராக இருந்த நிலையில், இவ்வாரம் 594 சம்பவங்கள் மட்டுமே பதிவானதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
Genomic கண்காணிப்பில், NB 1.8.1 பிறழ்வே 39 விழுக்காட்டுடன் ஆதிக்கம் செலுத்துகிறது.
அடுத்ததாக JN.1 பிறழ்வு 18 விழுக்காடாவும், XEC பிறழ்வு 13 விழுக்காடாவும் பிற வகைகள் 21 விழுக்காடாவும் உள்ளன.
இவ்வாண்டு இதுவரை 43,087 கோவிட் தொற்று சம்பவங்களை மலேசியா பதிவுச் செய்துள்ளது.
இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பதிவான 85,297 சம்பவங்களை விட சுமார் 50 விழுக்காடு குறைவாகும்.
என்ற போதிலும், பொது மக்கள் அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர வேண்டுமென சுல்கிஃப்ளி கேட்டுக் கொண்டார்.
அடிக்கடி கைகளை கழுவுதல், உடல்நலக்குறைவு இருந்தால் அல்லது கூட்டம் மிகுந்த இடங்களில் சுவாசக் கவசம் அணிதல், கிருமித் தொற்று ஆபத்து உள்ளவர்கள் தடுப்பூசி போடுதல் உள்ளிட்டவை அவற்றிலடங்கும்.