
கோவில் நிர்வாகங்களை நிறுவனமயமாக்க வேண்டிய நேரம் இது” பிரகாஸ் சம்புநாதான் வலியுறுத்து
கோத்தா கெமுனிங், பிப்ரவரி-14,
நாட்டில் இந்து கோவில்களின் நிர்வாகத்தை நிறுவனமயமாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக, சிலாங்கூர் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது கோவில்கள் 1966-ஆம் ஆண்டு சங்கப் பதிவிலாகா சட்டம் அல்லது தனியார் அறக்கட்டளைகளின் கீழ் இயங்குவதால், நில உரிமை பாதுகாப்பு, நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் சட்ட அங்கீகாரம் குறைவாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கான தீர்வாக, நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் தேசிய இந்து அறப்பணி வாரியம் (NHEB) அமைக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
NHEB மூலம் கோவில்களுக்கு நிரந்தர நில உரிமை பாதுகாப்பு, புனிதத் தலங்களுக்கு சட்ட அங்கீகாரம், ஒருங்கிணைந்த தேசிய பதிவேடு, மற்றும் கட்டாய ஆண்டு தணிக்கை நடைமுறைப்படுத்தப்படும்.
தவிர, திரட்டப்பட்ட வருவாயில் ஒரு விழுக்காடு கல்வி உதவித்தொகைகள், சிறு தொழில் மானியங்கள் மற்றும் B40 இந்திய சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படலாம்.
_“இது பாரம்பரிய பாதுகாப்பு மட்டுமல்ல; சமூக வலிமைப்படுத்தலாகும்”_ என அறிக்கை வாயிலாக பிரகாஸ் வலியுறுத்தினார்.
அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் அண்மைய காலமாக சர்ச்சையாகியுள்ள நிலையில், பிரகாஸ் இப்பரிந்துரையை முன்வைத்துள்ளார்.



