
கோலாலம்பூர், ஆகஸ்ட்-2 – ஒரு பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் எனப்படுவது முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்தல் மட்டுமல்லாமல் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைவதற்கும் உதவமுடியும். அனைவரையும் ஓர் அணியில் திரட்டி உயர் அடைவுநிலை கொண்ட பள்ளியாக உருவெடுக்க இச்சங்கம் இன்றைய காலத்தில் முனைப்புக்காட்டி வருகின்றது. அவ்வகையில் கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க அமைப்புக்கூட்டமானது கடந்த புதன்கிழமை மதியம் 2 மணிக்குப் பள்ளியின் கூட்ட அறையில் நடைபெற்றது.
இப்பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் பள்ளியின் தமிழ்மொழி ஆசிரியர் திருமதி கோகிலா ரகுபதி அவர்களின் ஆலோசனையால் தொடங்கப்பட்டதாகும். அவர், பள்ளிக்கு முன்னாள் மாணவர் சங்கம் அமைக்க வேண்டியதின் அவசியத்தை இதற்கு முன்பு வலியுறுத்தியுள்ளார். அவரது எண்ணத்திற்கேற்ப, பள்ளியின் முன்னாள் மாணவர் செல்வன் கிரிஷன் திவாகரன், தமது பள்ளித் தோழர்களை ஒருங்கிணைத்து, அதிகாரப்பூர்வமாக தொலைவரியில் தொலைத்தொடர்பு குழுவொன்றை உருவாக்கினார். இதுவே பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் உருவாக தொடக்கக் கட்டமாக அமைந்தது.
மேலும் இத்திட்டம் தொடரும் வகையில், மலேசியா நிறுவனப் பதிவுத்துறை அமைப்பில் பதிவு செய்ய வேண்டிய ஆலோசனையைப் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் திரு சந்திரசேகரன் வழங்கினார். பதிவு செய்வதற்கு முன், ஒன்று கூடும் அமைப்புக்கூட்டம் மிக அவசியம் என்பதையும் அவர் நினைவூட்டினார்.
இந்த அமைப்புக்கூட்டத்திற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் குமாரி கோ. நவமணி கோவிந்தசாமி அவர்களும் துணைத்தலைமை ஆசிரியர் திருமதி அம்பிகா சங்கரநாராயணன் ஆகியோர் தங்களது முழு ஆதரவினைத் தெரிவித்தனர். முன்னாள் மாணவர் சங்கம் பள்ளியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்யக்கூடிய அமைப்பாக இருக்கும் என பள்ளியின் தலைமையாசிரியர் உறுதியுடன் தெரிவித்தார்.
,அதுமட்டுமின்றி கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தமதுரையில் முன்னாள் மாணவர்கள் சிறந்தொரு சேவையினை பள்ளி வளர்ச்சிக்காக வழங்க வேண்டுமென தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கெடா மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவரும், ஆசிரியர் கல்விக் கழகம், துவான்கு பைனூன் வளாக விரிவுரையாளருமான முனைவர் மணியரசன் முனியாண்டி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் ROC இல் பதிவு செய்ய வேண்டிய முழுமையான நடைமுறைகள் குறித்து தெளிவாக விளக்கியதோடு, இணையவழியாக இந்த செயல்முறைகள் எளிதாக செய்யக்கூடியவை எனவும் குறிப்பிட்டார்.
மேலும், முன்னாள் மாணவர் சங்கம் செயல்பட வேண்டிய விதம், அதன் நோக்கங்கள், செயல்திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றியும், அந்த அமைப்புக்கென சின்னம், கொடி போன்ற அடையாளங்களை உருவாக்க வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தினார். பதிவு செய்யும் முன்னதாக தேவையான அனைத்து தகவல்களையும் தொகுத்துத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அமைப்புக்கூட்டத்தின் முடிவில், தற்காலிக செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் மாணவர் செல்வன் கிரிஷன் திவாகரன், பாயா பெசார் லூனாஸ் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குறித்தும், அவர்களிடம் காணப்படும் தவறான முன்வைப்பு எண்ணங்களை மாற்றி, சமூகத்தில் உயர்ந்த மதிப்பும் நற்பெயரும் கொண்ட இளைஞர் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் தன்னம்பிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட விருப்பம் தெரிவித்தார்.
இந்த அமைப்புக்கூட்டத்தை ஆசிரியர் திரு நாகேந்திரன் அவர்கள் சிறப்பாக வழிநடத்தினார். முன்னாள் மாணவர் சங்கத்தின் அமைப்புக்கு தேவையான பல்வேறு உதவிகளை வழங்கி தமது முழு ஒத்துழைப்பையும் அவர் வழங்கி வருவதாகவும் முன்னால மாணவர் சங்கத் தலைவர் கிரிஷன் திவாகரன் கூறினார்.