
சூரிச், ஜனவரி-2 – சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு பிரபலமான பனிச்சறுக்கு சுற்றுலா நகரில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 115 பேர் வரை காயமடைந்தனர்.
அவர்களில் ஏராளமானோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
இச்சம்பவம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, அதிகமாக மக்கள் குறிப்பாக இளம் வயதினர் கூடியிருந்த ஒரு மதுபான விடுதியில் அதிகாலை நேரத்தில் நிகழ்ந்ததாக போலீஸார் கூறினர்.
வெடிப்பைத் தொடர்ந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
பலர் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டே வெளியே ஓடி உயிர் பிழைத்த வேளை, முடியாதவர்கள் உள்ளேயே சிக்கி உயிரிழந்தனர்.
தீயணைப்பு படையினர் மற்றும் அவசர மருத்துவ குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
Champagne மதுபான பாட்டிலின் மேலிருந்த பிறந்தநாள் மெழுகுவர்த்திகளால் கூரையில் தீ ஏற்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர்;
ஆனால் தற்போது எந்த காரணமும் உறுதிப்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டரசு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து வரலாற்றில் பதிவான மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாக இந்த புத்தாண்டு பேரிடர் திகழ்கிறது.



